மாற்று திறனாளிகள் போராட்டம் – வீடியோ காலில் பேசி போராட்டத்தை முடித்து வைத்த அமைச்சர் நாசர்..!
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம், வீடியோ கால் பேச்சுவார்த்தை நடத்தை போராட்டத்தை முடித்துவைத்த அமைச்சர் நாசர்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தை டிசம்பர் 3 இயக்கத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் முகவர் விண்ணப்பங்களை முறையாக பரிசீலிக்காமல் மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிக்க வைப்பதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையா போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மாற்றுத்திறனாளிகள் தரப்பில், மாற்றுத் திறனாளிகள் ஆவின் நிறுவனத்தால் இனி அலைக்கழிக்கப்படக் கூடாது என்றும், ஆவின் நிறுவனங்களில் தேவையான அடிப்படை வசதிகளை மாற்றுத் திறனாளிகளுக்கு செய்து கொடுப்பதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
அதனை தொடர்ந்து, பாலவல்துறை அமைச்சர் நாசர் அவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் வீடியோ கால் மூலமாக, போராட்டத்திற்கான கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்றும், மாற்றுத் திறனாளிகள் இனி ஆவின் நிறுவனத்தால் எக்காரணம் கொண்டும் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள் என்றும் உறுதிபட தெரிவித்தார். அமைச்சர் உறுதியளித்ததையடுத்து, மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டனர்.