ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் : நீலம் பண்பாட்டு மையத்தினர் பேரணி.!
சென்னை: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பேரணி நடைபெற்று வருகிறது.
கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னையை அடுத்த பெரம்பூரில் பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேசிய கட்சியின் மாநில தலைவர் தலைநகர் பகுதியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.
ஆம்ஸ்ட்ராங் இறுதி அஞ்சலி ஜூலை 7ஆம் தேதி நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங் இறுதி சடங்கில் இயக்குனரும், நீலம் பண்பாட்டு மையத்தின் தலைவருமான பா.ரஞ்சித்தும் கலந்து கொண்டார். இயக்குனர் பா.ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு மேடைகளில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கண்டனத்தை பதிவு செய்து வருகிறார். மேலும், இந்த கொலை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உரிய நீதி கிடைக்க வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் சார்பாக பேரணி நடத்தப்படும் என முன்னதாக பா.ரஞ்சித் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று சென்னை எழும்பூரில் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பேரணி நடைபெற்று வருகிறது. இந்த பேரணியில் இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர்கள் அட்டக்கத்தி தினேஷ், மன்சூர் அலிகான் மற்றும் நூற்றுக்கணக்கான நீலம் பண்பாட்டு மையத்தினர் கலந்துகொண்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதற்கட்டமாக பொன்னை பாலு, திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருந்தனர். இதில் திருவேங்கடம் கடந்த ஜூலை 14ஆம் தேதி காவல்துறையினரின் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து மலர்க்கொடி, ஹரிஹரன், சதீஷ், அஞ்சலை என சில முன்னாள் அரசியல் பிரமுகர்களும் காவல்துறையால் கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.