இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.!
பழனி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு பரப்பிய விவகாரத்தில், இயக்குநர் மோகன் ஜி-க்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை வழங்கியுள்ளது.
மதுரை : பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய, இயக்குனர் மோகன் ஜி மீது 5 பிரிவுகளின் கீழ், பழனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி இயக்குநர் மோகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி-க்குஉயர்நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அதன்படி, தமிழகம் முழுவதும் வெளியாகும் பிரபல தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் மன்னிப்பு கேட்பதாக விளம்பரம் வெளியிட வேண்டும்.
உண்மையிலேயே பழனி கோயில் மீது அக்கறை இருந்தால், மனுதாரர் (மோகன் ஜி) பழனி கோயிலுக்குச் சென்று தூய்மைப் பணி மேற்கொள்ளலாம் அல்லது பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்தில் 10 நாட்கள் சேவை செய்யும் நோக்கில் பணியாற்றலாம்.
சமூக வலைதளங்களில் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ், ஆங்கில நாளிதழில் மன்னிப்பு கேட்டு தமிழ்நாடு முழுவதும் விளம்பரமாக வெளியிட வேண்டும். பழனி காவல் நிலையத்தில் 3 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும். வாய்ச்சொல் வீரராக இல்லாமல் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கும் முன் உறுதிப்படுத்தாமல் கூறக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.