தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்டுள்ள இயக்குனர் மோகன்.ஜி மீது பழனி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின் ஆய்வு முடிவில், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு , பன்றி இறைச்சி கொழுப்பு ஆகியவை கலந்ததாக கூறப்பட்டது.
கோயில் பிரசாத லட்டுகளில் விலங்குகளின் மாமிச கொழுப்புகள் கலந்ததாக எழுந்த குற்றசாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து தமிழ் திரைப்பட இயக்குனர் மோகன்.ஜி அண்மையில் ஒரு தனியார் யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்து இருந்ததாக குற்றம் சாட்டினார்.
அந்த பேட்டியில் அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் புகழ் பெற்ற ஒரு கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் சில மாதங்களுக்கு முன்னர் உணவு தரமில்லை என்ற புகார் வந்தது. அந்த பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்ததாக செவிவழி செய்தியாக நான் கேள்விப்பட்டேன்”என்று கூறினார். அப்போது நெறியாளர் பழனி கோயிலிலா.? என கேட்கவே, “நான் அந்த கோயில் ஊழியர்கள் சிலரிடம் கேட்டேன். அவர்கள் மூலமாக இந்த செய்தியை அறிந்து கொண்டேன்” என கூறினார்.
மோகன்.ஜி-யின் இந்த சர்ச்சை கருத்துக்கள் குறித்து திருச்சி சைபர் கிரைம் போலீசில் எழுந்த புகாரின் பெயரில் , திருச்சி போலீசார் சென்னை காசிமேட்டில் உள்ள மோகன்.ஜி வீட்டில் வைத்து இன்று அவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து தற்போது பழனி முருகன் கோயில் நிர்வாகம் சார்பிலும் மோகன்.ஜி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடர்ந்துள்ளனர்.