விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் – வழிமுறைகளை வெளியிட்ட கூட்டுறவுத்துறை!
விவசாயிகளிடம் நேரடி கரும்பு கொள்முதல் செய்வதற்கான முக்கிய விதிகளை வெளியிட்டது கூட்டுறவுத்துறை.
கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பொங்கலுக்கான கரும்பினை நேரடியாக விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 2022-ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புடன், கரும்பும் சேர்த்து வழங்க தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கரும்பு கொள்முதல் தொடர்பான வழிமுறைகளை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது. அதில், நியாயவிலை கடைகளில் வழங்கும் பொங்கல் கரும்பை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய தமிழக உத்தரவிட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் முழு கரும்பின் விலை அதிகபட்சம் ரூ.33-ஆக இருக்க வேண்டும். பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பபட வேண்டும்.
கரும்பின் உயரம் 6 அடிக்கு குறையாமலும், மெலிதாக இல்லாமலும், சராசரி தடிமனைவிட கூடுதலாக இருக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் விளையும் கரும்பினை கொள்முதல் செய்வதற்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான விலை, விவசாயிகளுக்கு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்கள் அனுமதிக்கப்படக் கூடாது. விவசாயிகளிடமிருந்து, நேரடியாகவோ அல்லது கூட்டுறவு சங்கம் மூலமாகவோ மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.