2026-ல் தவெக-வுடன் கூட்டணி.? முன்னாள் அதிமுக அமைச்சர் பதில்.!
தவெக கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் அறிவிப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருந்தாலும், தற்போதே அதுபற்றிய பேச்சுக்கள் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி தேர்தல் பணிகள் என தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. ஏற்கனவே திமுக, அதிமுக தேர்தல் பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் களத்தில் தவெகவும் பலமாக காலூன்ற தொடங்கியுள்ளது.
விஜய் தலைமையில் தவெக முதல் மாநாடு முடிந்து ஒரு வாரம் ஆகிய நிலையிலும் இன்னும் அந்த மாநாடு குறித்த பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றனர். விசிகவை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியும் தவெக குறித்த தங்கள் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. இப்படியான சூழலில் அதிமுக மட்டும் தவெக பற்றி எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை. மாறாக ஆதரவு நிலைப்பாட்டிலேயே உள்ளது.
இதனால் , 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – தவெக கூட்டணி அமையுமா என்ற கேள்விகள் இப்போதே எழுந்துள்ளன. இந்த கேள்வி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், “எங்களைப் பற்றி அவர் (விஜய்) எதுவும் விமர்சனம் செய்யவில்லை. அதனால் நாங்களும் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் (சீமான்) தவெகவை விமர்சிப்பதற்கு தவெகவினர் பதில் சொல்வார்கள். நாங்கள் இதுபற்றி எதுவும் சொல்லவில்லை.
2026இல் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சராக வர வேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை. கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவுகளை எடப்பாடி பழனிச்சாமி தான் அறிவிப்பர். ” என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.