திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை..குற்றவாளிக்குத் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் – சீமான்

Default Image

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திண்டுக்கல் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமி கலைவாணியைப் பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் செலுத்தி கொலைசெய்த கிருபானந்தன் என்பவன் கைதுசெய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அவனை திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இந்நிலையில், குற்றவாளிக்குத் தண்டனைப் பெற்றுத்தர தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள குரும்பபட்டி கிராமத்தில் வசிக்கும் வெங்கடேசு என்பவரின் 12 வயது மகள் கலைவாணி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், அக்கோரச்சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளி தண்டனையின்றி தப்பியிருப்பது பேரதிர்ச்சி தருகிறது.

கேட்போரின் ஈரக்குலையையே நடுநடுங்கச் செய்யும் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளி விடுதலைபெற்று தப்பிக்க தமிழக அரசு வாய்ப்பு ஏற்படுத்தியிருப்பது வெளிப்படையான சனநாயகத் துரோகமாகும். இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் நாளை 3 இலட்சம் முடிதிருத்தும் நிலையங்களை அடைத்து மாநிலம் முழுவதும் நடத்த இருக்கும் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான தண்டனைச் சட்டங்களைக் கடுமையாக்கி, அவர்கள் மீதான வழக்கை சிறப்புத் தனி நீதிமன்றங்கள் மூலம் விரைந்து விசாரித்துத் தண்டனையளிப்பதனால் மட்டுமே இத்தகைய குற்றங்களை அடியோடு சமூகத்திலிருந்து அகற்ற இயலும்.

ஆகவே, சிறுமி கலைவாணியை வன்கொடுமை மற்றும் படுகொலை செய்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் விரைவாக மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு உச்சபட்சத் தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் எனவும், தொடரும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை முற்றுமுழுதாகத் தடுத்து நிறுத்த கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
edappadi palaniswami sengottaiyan
TN BJP Leader Annamalai - BJP MLA Nainar Nagendran
UttarPradesh - Mosque
Tamilnadu CM MK Stalin
Indian stock market down
Minister KN Nehru