தலைவரைக் காணச் சென்றுவிட்டீர்களா? – முதல்வர் மு.க.ஸ்டாலினின் இரங்கல் கடிதம்..!

Default Image

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சண்முகநாதன் அவர்களின் மறைவு குறித்து திமுக தொண்டர்களுக்கு உருக்கமான மடல் ஒன்றை  எழுதியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளரான கோ.சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,நேற்று காலமானார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று மட்டும் இரண்டு முறை அவரது இல்லத்திற்கு சென்று, சண்முகநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சண்முகநாதன் அவர்களின் மறைவு குறித்து திமுக தொண்டர்களுக்கு உருக்கமான மடல் ஒன்றை  எழுதியுள்ளார். அந்த மடலில், ‘ நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் கண்ணீர் மடல். நம்ப முடியவில்லை, உடன்பிறவாச் சகோதரராக உலவிய அண்ணன் சண்முகநாதன் இல்லை என்பதை! ஏற்றுக்கொள்ள மறுக்கிறது இதயம், இயற்கை அவரைப் பறித்துக் கொண்டதை! யாருக்கு ஆறுதல் சொல்வேன் நான்? யாரிடம் ஆறுதல் பெறுவது என்று தவியாய்த் தவிக்கிறது என் மனம்! தலைவரைக் காணச் சென்றுவிட்டீர்களா? எப்போதும் தலைவருக்கு உதவியாகவே இருப்பேன் என்ற உறுதியோடு போய்விட்டீர்களா?

உங்களை நினைக்கும்போது மனதுக்குள் எத்தனையோ எண்ணங்கள் அலைமோதுகின்றன.

முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தின் மாடிப்படிக்கட்டு ஏறுவதற்கு முன், அங்குள்ள சிறிய அறையில் எப்போதும் சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் சஃபாரி உடை அணிந்த அந்த உருவத்தை உடன்பிறப்புகளாகிய உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். அந்த இல்லத்தில் தவழ்ந்து வளர்ந்த, உங்களில் ஒருவனான நான், என் சிறுவயதிலிருந்தே அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்; பழகி வந்திருக்கிறேன்; அவரன்றி அணுவும் அசையாது என்பதுபோல, அவரன்றித் தலைவரின் பொழுதுகள் முழுமை பெறா. சண்முகநாதன் என்பது பெயர் அல்ல, தலைவர் கலைஞரின் நீங்கா நிழல்.

தேர்தல் களத்தைத் தி.மு.கழகம் சந்திப்பதற்கு முன்பே, தலைவர் கலைஞரின் மேடைப் பேச்சுகளை உன்னிப்பாகக் கவனித்து ஓரெழுத்து விடாமல் குறிப்பெடுக்கின்ற காவல்துறையின் சுருக்கெழுத்தராக இருந்தவர் சண்முகநாதன் அவர்கள். அவரை ‘சுருக்’கென்று அடையாளம் கண்டு கொண்டார் நம் ஆருயிர்த் தலைவர். பேரறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் தலைவர் கலைஞர் அமைச்சராகி, அண்ணாவின் மறைவுக்குப்பிறகு முதலமைச்சர் பொறுப்பையும் ஏற்ற காலகட்டங்களில் அவருக்கு ஓர் உதவியாளர் தேவைப்பட்ட நேரத்தில், தன் பேச்சுகளை விவேகத்துடன் வேகமாகக் குறிப்பெழுதிய சண்முகநாதன்தான் தலைவரின் நினைவுக்கு வந்திருக்கிறார். அன்று முதல் தலைவர் கலைஞரின் நிழலாகவே இறுதிவரை அவர் தொடர்ந்தார். எனக்கு உடன்பிறவா அண்ணனாக இருந்தார்.

அப்போது தலைவருக்கு இருந்த செயலாளர்கள்-உதவியாளர்களில் இளையவர் சண்முகநாதன் என்பதால் அவரை ‘குட்டி பி.ஏ.’ என்றே எல்லாரும் அழைப்போம். 80 வயதிலும் அவர் எங்களுக்கு குட்டி பி.ஏ.தான்; கலைஞரின் கெட்டி பி.ஏ.வும் அவர்தான். கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மாற்றுக் கட்சி ஆட்சியாளர்கள் தன் மீது பழிவாங்கும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டாலும் தலைவர் கலைஞரின் அருகிலேயே அவர் இருந்தார். கோபாலபுரம் குடும்பத்தில் அவரும் ஒருவர்.

எங்களைவிட அதிக நேரம் தலைவரின் அருகில் இருக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றவர். தலைவர் கலைஞரின் மனம் நினைப்பதை, உதடுகள் உச்சரிப்பதற்கு முன்பாகவே நிகழ்த்தி முடிப்பவர். எத்தனையோ தலைவர்கள், “கலைஞருக்கு சண்முகநாதன் போல நமக்கு ஓர் உதவியாளர் வேண்டும்” என்று நினைக்கும்படி கலைஞரின் மனக்குரலை – மனதின் எதிரொலியை எழுத்து வடிவத்தில் மொழிபெயர்க்கக்கூடியவராக இருந்தவர்.

சின்னஞ்சிறு வயதில், மகனாக நான் உணர முடியாத தலைவரின் மன உணர்வை, தலைவரின் நிழலாக இருந்த சண்முகநாதன் துல்லியமாக அறிவார். நம் உயிர் நிகர்த் தலைவர் கலைஞர் அவர்களை, ‘அப்பா..’ என நான் கூப்பிட்டதைவிட, ‘தலைவரே’ என்று அழைத்ததுதான் அதிகம். தந்தையாக இருந்தாலும் எனக்கு அவர் தலைவர்தான். அந்தத் தலைவரை, கழகத்தின் இளைஞரணிச் செயலாளராக, துணைப் பொதுச்செயலாளராக, பொருளாளராக நான் சந்திக்க வேண்டிய சூழல்களில், மாடிப்படி அருகே பணியாற்றிக் கொண்டிருக்கும் சண்முகநாதனிடம் சொல்லிவிட்டு, அவர் தலையசைவுக்குப் பிறகே, மாடிப்படி ஏறுவேன்.

கவிச்சுடர் கவிதைப்பித்தன் தன்னுடைய ‘ஆசை’யை வெளிப்படுத்திய கவிதையில், “ஒரு நாள் சண்முகநாதனாக வாழ்ந்திட ஆசை” என்று எழுதியிருப்பார். அவருக்கு மட்டுமல்ல, நம் இயக்கத்தில் பலருக்கும் அந்த ஆசை உண்டு; ஆனால், அது பேராசை. ஒரு நாள் என்றாலும் சண்முகநாதனால் மட்டுமே சண்முகநாதனாக வாழ்ந்திட முடியும். “இந்தப் பிறவியே கலைஞருக்கானது” என்று சொல்லி, அரைநூற்றாண்டு காலம் தலைவரின் உதவியாளராக இருந்தார். தலைவர் கலைஞரின் அன்புக்குரியவர். அவருக்கு சுமைதாங்கியாக – இடிதாங்கியாக இருந்தவர். தலைவரின் கோபத்திற்குள்ளானவர்.

கோபித்துக்கொண்டும் சென்றவர். ஆனால், நீரடித்து நீர் விலகாது என்பதுபோல, மேகக்கூட்டம் விலகி சூரியன் ஒளிர்வதுபோல, உடனடியாகத் திரும்பிவந்து, முன்பைவிட வேகமாகத் தன் பணிகளைத் தொடர்ந்தவர்.

நம் உயிர்நிகர் கலைஞருக்கு அவர் உதவியாளர். உங்களில் ஒருவனான எனக்கு அவர் உறுதுணையாளர். என் இளம் வயதிலிருந்தே, “தம்பி.. தம்பி..” என்று பாசத்தைப் பொழிந்தவர். தலைவர் கலைஞரிடம் நான் பெற்ற அரசியல் பயிற்சிகளை சரியாகச் செய்கிறேனா எனக் கவனித்து, கண்காணித்து, கணித்து உற்சாகப்படுத்தியவர். இயக்கத்தைக் காக்கின்ற பெரும்பணி என் தோள் மீது சுமத்தப்பட்ட நேரத்தில், என்னுடைய செயல்பாடுகள் நாள்தோறும் மேம்பாடு அடைய அவ்வப்போது அரிய ஆலோசனைகள் வழங்கியவர்.

எந்த ஒரு நிகழ்ச்சியில் நான் பேசினாலும், எந்த ஒரு செயல்திட்டத்தை நிறைவேற்றினாலும், அது முடிந்தபிறகு அவரிடம், “நேரலையில் பார்த்தீங்களா“ என்று நான் கேட்பது வழக்கம். தன் பணிகளுக்கிடையிலும், நேரலையில் கவனித்ததை நேரிலோ அலைபேசியிலோ சொல்வார்; மகிழ்வார். “இதைக் காண தலைவர் இல்லையே” என்று ஏங்குவார். சின்னச் சின்ன திருத்தங்களைச் சுட்டிக்காட்டுவார்.

நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் இல்லாவிட்டாலும் கோபாலபுரம் இல்லத்திற்கு உயிரும் ஒளியும் எப்போதும் உண்டு. அந்த ஒளியுமிழ் விளக்கு போல, தலைவர் கலைஞர் அவர்களின் மறைவுக்குப் பிறகும், மாடிப்படிக்கு கீழ் உள்ள தனது அறையில் அமர்ந்து பணிகளை நிறைவேற்றி வந்தவர் சண்முகநாதன். அண்மையில் வெளியிடப்பட்ட எனது சட்டமன்ற உரைகளின் மூன்று தொகுதிகளையும் முழுமையாகப் படித்து, மெய்ப்புப் பார்த்து, இணைக்க வேண்டியவற்றை நினைவுபடுத்தி, அவற்றையும் சேர்த்து, மூன்று தொகுதிகளும் முழு வடிவில் வருவதற்குப் பேருதவியாக இருந்தவர் சண்முகநாதன்தான்.

நம்மைப் போன்ற உடன்பிறப்புகளிடம் முரசொலி வழியாக நாள்தோறும் உரையாடிய தலைவர் கலைஞர் அவர்களின் ‘உடன்பிறப்புக் கடிதங்கள்’ நூலின் ஏறத்தாழ 50 பாகங்களை முழுமையாகத் தொகுத்து, பிழை திருத்தி, காலவரிசைப்படுத்தி, கச்சிதமாகப் பணி முடித்து, அச்சுக்குத் தயாராக அனுப்பிவைத்துவிட்டு, அவர் நம்மிடமிருந்து பிரியா விடை பெற்றுவிட்டார்.

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டு மீண்டு வந்தவர், அண்மையில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, நேரில் சென்று பார்த்தேன். “தம்பி.. உங்களுக்கு நிறைய வேலை இருக்கு. அதை கவனிங்க. நான் என்னைப் பார்த்துக்குறேன்” என்றார், கடமையுணர்வை நினைவூட்டியபடி! ஆனாலும், எங்களுக்கிடையிலான பாச உணர்வை மறைக்க முடியுமா? அவரது உடல் நலன் குறித்து அடிக்கடி விசாரிப்பதும், நேரில் சென்று பார்த்து ஆறுதல் சொல்வதுமாக இருந்தேன்.

தன்னுடைய பெயர்த்தியின் திருமண விழா குறித்து மகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துகொண்டு, என்னுடைய தேதியையும் உறுதி செய்து கொண்டவர், “நான் இல்லாவிட்டாலும், நீங்க இருந்து திருமணத்தை நடத்தித் தரவேண்டும்” என்று அவர் சொன்னபோது, எனக்கு வார்த்தைகள் வரவில்லை. அவர் கைகளைப் பற்றி ஆறுதல் சொன்னேன். ஆறுதல் சொற்கள் பொய்த்துவிட்டன. இல்லை… அன்பு அண்ணன் சண்முகநாதன் தன்னை மெய்ப்பித்துவிட்டார்.

ஆம்.. அவர், முத்தமிழறிஞர் கலைஞரின் உயிருக்கு உயிரான நிழல்போல பிரியாமல் இருந்தவர், அந்த உயிர் சென்ற இடத்தைத் தேடி நிழலும் சென்றுவிட்டது. என்னதான் என்னைத் ‘தம்பி, தம்பி’ என்று அழைத்துப் பாசம் காட்டினாலும், நம் உயிர்நிகர் தலைவர் மீது அவர் கொண்டிருந்த விசுவாசம்தானே முதன்மையானது!

தலைவர் கலைஞர் இருந்தவரை தன் பணிகளால் அந்த விசுவாசத்தைக் காட்டியவர், தலைவர் இல்லாத நிலையில் தன்னுயிர் தந்து விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார்.

அவரின் அயராத பணியும், கழகத்தின் ஒவ்வொரு நிர்வாகியிடமும் அவர் காட்டிய அன்பும், தலைமைதான் ஓர் இயக்கத்தின் உயிர்நாடி என்பதைத் தன் செயல்களால் அவர் உணர்த்திய விதமும் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் முதல் கடைக்கோடித் தொண்டன் வரை தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. அதனால்தான் அவருக்கு இறுதி மரியாதை செலுத்திட கழகத்தின் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், முன்னாள் – இந்நாள் நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், மாற்றுக் கட்சியினர், கலைஞர் மீது அன்புகொண்ட கவிஞர்கள், இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் திரண்டு வந்து, கண்ணீரைக் காணிக்கையாக்கியுள்ளனர்.

நான் உறைந்து நிற்கிறேன். அவரின் அன்றலர்ந்த முகம் தவிர வேறெதுவும் என் மனதில் தோன்றவில்லை.

உடன்பிறவா அண்ணனே.. உடன்பிறப்புகளின் தலைவரிடம் சென்றுவிட்டவரே! எங்களில் நீங்கள் என்றென்றும் வாழ்கிறீர்கள். எங்கள் ‘இயக்க’த்தில் நீங்கள் குருதியோட்டமாகக் கலந்திருக்கிறீர்கள்.

போய் வாருங்கள்.. உங்கள் பணிகளையும் சேர்த்தே தொடர்ந்திடுவோம்!” என  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்