“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!
சர்ச்சை பேச்சாளர் மகா விஷ்ணுவையும், அமைச்சர்களையும் இணைத்து இபிஎஸ் விமர்சனம் செய்ததற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை : அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த மாற்றுத்திறனாளி ஆசிரியரை மகா விஷ்ணு இழிவு படுத்தி பேசியதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கோவில்பட்டியில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
மேலும், ” ஆண்டவனால் தன நீங்கள் மாற்றுத்திறனாளியாக படைக்கப்பட்டுள்ளீர்கள் என்று அந்த ஆசிரியரை நோக்கி கடுமையான சொல்லை மகா விஷ்ணு பயன்படுத்தி உள்ளதும் கண்டிக்கத்தக்கது. மாற்றுத்திறனாளிகளிடம் மனிதநேயதுடன் நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் மனம் காயம்படும்படி பேசுவது கண்டனத்திற்குரியது. இப்படி பேசிய நபர் அண்மையில் அன்பின் மகேஷ் உட்பட பல்வேறு திமுக அமைச்சர்களுடன் புகைப்படங்கள் எடுத்துள்ளார். அரசின் சொல்வாக்கு காரணமாகவே பள்ளிகளில் இவ்வாறு சென்று ஒரு நபர் பேசுகிறார். இது கண்டனத்திற்குரியது. அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய நபரை எவ்வாறு பேச அனுமதித்தார்கள் ‘ என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
திமுக அமைச்சர்களுடன் மகா விஷ்ணு புகைப்படம் எடுத்துள்ளது பற்றிய இபிஎஸ் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ” தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களின் பட்டியலை பார்த்துவிட்டு வயிற்றெரிச்சல் கொள்ளும் பழனிச்சாமி அதனை திசை திருப்ப இவ்வாறு உளறுகிறார்.” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , “நீங்கள் முதலமைச்சராக இருந்தவர் தானே? அப்போது உங்களைத் தேடி பலர் வருவார்கள். அப்படி வருவோர்கள் அனைவரது பின்புலத்தையும் நீங்கள் அலசி பார்த்ததுண்டா? இது கூடத் தெரியாமல நீங்கள் முதலமைச்சராக பொறுப்பு வகித்தீர்கள் தற்போதும் எதிர்கட்சித் தலைவராக இருக்கிறீர்கள்?
நீங்கள் முதலமைச்சராக இருந்த போதுதான், கோவையைச் சேர்ந்த ஆனந்த எனும் நபர் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சிட்டு 2018இல் கைதானார். ஆனந்த் என்பவருடன் பழனிச்சாமி இருக்கும் புகைப்படம் வெளியாகி அன்றைக்கு சந்தி சிரித்தது.
பகுஜன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன் கைது செய்யப்பட்டார், அவருக்கு சீட் கொடுத்தது எடப்பாடி பழனிச்சாமி. சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் பேச்சுக்கு அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டும் என சொல்லும் பழனிச்சாமி, ஆனந்த், ஹரிஹரன் ஆகியோர் செயல்களுக்கு பொறுப்பேற்பாரா.?
ஜெயலலிதா , தனது கட்சிக்காரர்கள் (அதிமுக) தவறு செய்தால் கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவார். ஆனால், எம்எல்ஏ பதவியை ஜெயலலிதா பறித்ததில்லை. ஆனால், உங்கள் ஆட்சிக்கு ஆபத்து என்றதும் 18 எம்எல்ஏக்களை நீங்கள் நிக்கினீர்கள். பின்னர் தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை இணைத்துக் கொண்டு அவருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்து ஆட்சியைக் காப்பாற்றினீர்கள்? உங்கள் தனித்துவ அடையாளமே பாதம்தாங்கி தானே?
நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது தான், ‘தமிழகத்தில் போராட்டம் நடத்துவது பேஷன் ஆகிவிட்டது’ என்று கூறியவர் தானே நீங்கள்? கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியாவுக்கு அழுத்தம் கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியது யார்?
முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை என உளறிக் கொண்டிருக்கிறார்கள் இபிஎஸ். அம்மையார் ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது அப்போலோவில் நீங்கள் ஆரம்பித்த உளறலை இன்னுமா நீங்க நினைக்கவில்லை.?
எடப்பாடி பழனிச்சாமிக்கு வந்திருப்பது பொறாமை நோய். அதற்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டை தரை மட்டத்திற்கு இறக்கிய பழனிச்சாமிக்கு யாரையும் குறை சொல்ல அருகதை இல்லை. இத்துடன் உங்கள் பேட்டி நாடகத்தை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என அந்த அறிக்கையில் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார்.