செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் : ” திருடுவது தியாகம் லிஸ்ட்ல வருதா.?” சீமான் கடும் விமர்சனம்.!
செந்தில் பாலாஜி என்ன தியாகம் செய்துவிட்டடு சிறைக்கு சென்றாரா.? உங்க கட்சியில் இருந்தால் தியாகம், அடுத்த கட்சியில் இருந்தால் ஊழலா.? என நா.த.க தலைவர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நகல் புழல் சிறைக்கு அனுப்பப்பட்டதும் அவர் இன்று ஜாமீனில் வெளியே வரவுள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை வரவேற்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அவரை வரவேற்று பதிவிட்டிருந்தார். அதில், ‘ சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது. உன் மன உறுதி அதனினும் பெரிது.” எனப் குறிப்பிட்டிருந்தார்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளித்தது குறித்தும், முதலமைச்சர் வரவேற்றது குறித்தும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் தனது விமர்சனங்களை முன்வைத்தார். அவர் கூறுகையில், ” நம்ம ஊரில் எதற்குத்தான் பரபரப்பு இல்லை.? எல்லாம் பரபரப்பு தான். லட்டு பரபரப்பு, ஜிலேபி பரபரப்பு, பிணை கிடைப்பது பரபரப்பு.” என பேசினார்.
அப்போது, முதலமைச்சர், ‘செந்தில் பாலாஜியின் தியாகம் பெரியது’ என பதிவிட்டது குறித்து பேசுகையில், ” எது தியாகம். திருடுவது தியாகம், லஞ்சம் வாங்குவது, டாஸ்மாக்கில் 10 ரூபாய் கூடுதலாக விலை நிர்ணயம் செய்து விற்பது, கமிஷன் வாங்குவது என இதெல்லாம் தியாகம் லிஸ்டில் வருகிறது. அப்படி என்றால், என் தாத்தனுங்க செக்கிழுத்து ஜெயிலில் இருந்தார்களே.? அதன் பெயர் என்ன.?
மண் அல்லி விக்கிறது, மலையை குடைந்து விற்பது, சாராயம் காய்ச்சு என்பதெல்லாம் தற்போது வீரதீர செயல்கள் , தியாகம் உள்ளிட்ட லிஸ்டில் வந்து சேர்கிறது. செந்தில் பாலாஜிக்கு எதிராக இந்த வழக்கை போட்டது திமுக. சிறைக்குள்ளே வைத்தது யார் என்பது உங்களுக்கே தெரியும். உங்கள் கட்சியில் இருந்தால் அதன் பெயர் தியாகம் லிஸ்டில் வந்துவிடும். அதே எதிர்க்கட்சியில் இருந்தால் அது ஊழலாக மாறிவிடும்.
இதே, முதலமைச்சர் அப்போது அதிமுகவில் செந்தில் பாலாஜி இருக்கும்போது, இவர் பேசிய வீடியோவை நீங்கள் பார்த்து உள்ளீர்கள். அதே செந்தில் பாலாஜி தற்போது தியாகி ஆகிவிட்டார்.” என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.