சைக்கிளில் போனாலும் இனி ஹெல்மெட் போடணுமா – வைரல் வீடியோ
-மத்திய அரசானது வாகன சட்டம் திருத்தம் கொண்டு வந்த பிறகு, போலிசார் அனேக இடங்களில் வாகனச் சோதனையில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்போது பெரும்பாலானோர் உரிய ஆவணங்களை வைத்து தான் வண்டி ஓட்டிக்கொண்டு செல்கின்றனர். முக்கியமாக ஹெல்மெட் போட்டு தான் வாகன ஓட்டிகள் வண்டி ஓட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தர்மபுரி மாவட்டத்தில், பென்னாகரம், ஏரியூர் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் காவல் நிலைய அதிகாரிகள் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்த பள்ளி மாணவன் ஒருவனை உதவி ஆய்வாளர் பிடித்து வைத்து அவனது சைக்கிளுக்கு பூட்டு போட்டு கொண்டு சைக்கிளை ஓரங்கட்டினார். ஒரு மணிநேரமாக காத்திருந்து அச்சிறுவன், தனது சைக்கிளை எடுத்துச் சென்றான். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அந்த மாணவனிடம் உதவி ஆய்வாளர் ஹெல்மெட் அணியாதது பற்றி கேட்டதாகவும், அது குறித்து அவரது வீட்டுக்கு தகவல் தெரிவிக்க சொன்னதாகவும் தகவல் பரவி வருகிறது.