தமிழக எல்லைகளில் தடுக்கப்பட்ட கஞ்சா.. இப்போ ரயிலில் வருகிறது.! டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி தகவல்.!
தமிழக எல்லைகளில் சாலை மார்க்கமாக போதை பொருள் நடமாட்டம் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. ஆதலால், கடந்த 3 மாதத்தில் மட்டும் ரயில்வே போலிசாரால் 1700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்தார்.
இன்று சென்னையில், ரயிலில் திருடப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வின் போது டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். அப்போது பேசுகையில், சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ரயில் திருடப்பட்ட பொருட்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
ரயில்வே போலீசார் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்தாண்டைஒப்பிடுகையில் ரயில்வே போலீசார் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். பிற மாநில குற்றவாளிகள் தமிழகத்தில் நுழைய முடியவில்லை என்றால் அதற்கு ரயில்வே போலீசார் தான் காரணம்.
தமிழகத்தில் போதை பொருட்களை கட்டுப்படுத்த முதல்வரின் உத்தரவின் பேரில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக எல்லைகளில் சாலை மார்க்கமாக போதை பொருள் நடமாட்டம் பெருமளவு தடுக்கபட்டுள்ளது. குறிப்பாக கஞ்சா நடமாட்டம் எல்லைகளில் தடுக்கப்பட்டுள்ளது .
ஆனால், அவர்கள் ரயிலில் கஞ்சா கடத்த ஆரம்பித்து விட்டனர். கடந்த 3 மாதத்தில் மட்டும் ரயில்வே போலிசாரால் 1700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கஞ்சா விற்பனையாளர்கள் மீது கைது நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது குற்றவாளிகளின் வங்கி கணக்கு முடக்கம், சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் முடக்கம் போன்ற நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.