பாஜக நிர்வாகிகள் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் காங்கிரஸ் புகார்!
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாக பாஜக நிர்வாகிகள் மீது காங்கிரஸ் புகார்.
மதம் மாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் தான் அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக தமிழக பாஜக தலைவர் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
மாணவி தற்கொலைக்கு நீதி வேண்டும் என்பது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வரும் நிலையில், அவர் மதக்கலவரத்தை தூண்டுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, தஞ்சை பள்ளி மாணவி தற்கொலையில் மதப்பரப்புரை புகார் எதுவும் இல்லை என பள்ளி மற்றும் பிற மாணவர்களிடம் விசாரணை நடத்திய பின்பு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிக்கை மூலம் தெரிவித்திருத்தனர். மதரீதியான பிரச்சாரங்கள் தலைமை ஆசிரியர்களாலோ, மற்ற ஆசிரியர்களாலோ செய்யப்படவில்லை என கூறினர்.
குறிப்பிட்ட பள்ளியில் கிறிஸ்துவ மாணவர்களை விட இந்து மாணவர்களே அதிகளவில் கல்வி பயில்கின்றன என்றும் விளக்கமளித்திருந்தனர். இந்த நிலையில், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகள் குஷ்பு, எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.