திருவண்ணாமலை தீபத் திருவிழா.. குவியும் பக்தர்கள்.. சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!
நாளை கார்த்திகை மாத தீபத் திருவிழா திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. கடந்த நவம்பர் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட தீபத் திருவிழா நாளை 10ஆம் நாளில் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றபடும் உச்ச நிகழ்வோடு நிறைவு பெறுகிறது.
கார்த்திகை தீபத்திருவிழாவின் 9வது நாளான இன்று மகாதீப கொப்பரை திருவண்ணாமலை மீது கொண்டுசெல்லபட்டது. ஐந்தே முக்கால் அடி உயரம் கொண்ட இந்த கொப்பரையானது 300 கிலோ எடை கொண்டது. இதில் பக்த்ர்கள் காணிக்கையாக அளித்த 4500 கிலோ நெய் ஊற்றி, 1200 மீட்டர் காடா துணி சுற்றி 2668 அடி உயரத்தில் திருவண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றப்படும்.
இதற்கான ஆயத்த பணிகள் இன்று முழுவீச்சில் தொடங்கியுள்ளன. நாளை கார்த்திகை தீப திருவிழாவின் உச்ச நிகழ்வான மகாதீப திருவிழா, அதுவும் ஞாயிற்று கிழமை என்பதால் பக்த்ர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. 14 ஆயிரம் போலீசார், 120 கமாண்டோ அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 24 தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ வசதிகள், 150 வனத்துறை அதிகாரிகள் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மீது ஏறி சென்று மகாதீபத்தை காண்பதற்கு 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலை கோயிலுக்கு செல்ல சுமார் 2,700 சிறப்பு பேருந்துள் இயக்கப்படவுள்ளன.
திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்களையும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 26, 27) சென்னை தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு காலை 8.40க்கு புறப்படும்சிறப்பு ரயில் மதியம் 12.35 மணிக்கு செல்லும். அதே போல மதியம் 1.45 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மாலை 5.15க்கு சென்னை தாம்பரம் வந்தடையும். நவம்பர் 26இல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 12.50 மணிக்கு திருவண்ணாமலை செல்ல உள்ளது. அடுத்து நவம்பர் 27 அன்று அதிகாலை 3 மணிக்கு 27ஆம் தேதி திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் ரயில் 9 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாதீபத் திருவிழா நடைபெறும் நாளை அதிகாலை அண்ணாமலையார் கருவறை அருகே பரணி தீபம் ஏற்றப்படும். அடுத்து மாலை 6 மணிக்கு 2668 அடி உயரத்தில் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.