மோடி ஆட்சியில் தொடரும் சீரழிவு! வரலாறு காணாத நெருக்கடியில் இந்திய பொருளாதாரம் – சிபிஎம் மாநில செயலாளர்
பாஜக அரசு சுயநல அரசியல் லாபத்தை நோக்கி மட்டுமே சிந்திக்கிறார்கள் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றசாட்டு.
விலை உயர்வுக்கு ஊக்கம் அழித்துவிட்டு, தற்போது ஐயோ பணவீக்கம் என்று ஓலம் இடுகிறது மத்திய அரசு என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மோடி ஆட்சியில் தொடரும் சீரழிவு. வரலாறு காணாத நெருக்கடியில் இந்திய பொருளாதாரம். இந்திய ரூபாயின் மதிப்பு உயரும், பெட்ரோல் விலை குறையும், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றெல்லாம் வாய்ச்சவடால் அடித்து ஆட்சிக்கு வந்த மோடி அரசின் இப்போதைய நிலை என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
8 ஆண்டுகளில் கோடானு கோடி உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு, வேலையின்மை நெருக்கடியை ஏற்படுத்தி, பெரும் துயரமே மிஞ்சுகிறது. செல்லாக் காசு அறிவிப்பு, ஜி.எஸ்.டி., வரிக் கொள்ளை, தீவிர தனியார்மயம்/ தாராளமய கொள்கைகளால் சிறுகுறு உற்பத்தியாளர்களையும், தொழில் முனைவோரையும், அனைத்து சாதாரண மக்களையும் கடுமையாக பாதித்தது. இப்போது கடுமையான பெருவேக விலையேற்ற பிரச்சனை உருவாகியுள்ளது. பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் கதையாக, தனது பெட்ரோல், டீசல் மற்றும் இதர வரிகொள்கைகளால் விலை உயர்வுக்கு ஊக்கம் அழித்துவிட்டு, ” ஐயோ, பணவீக்கம்” என்று ஓலம் இடுகிறது மத்திய அரசு.
முக்கிய பண்டிகைகள் வரவுள்ள சூழலில், பண வீக்கத்தின் காரணமாக ஊக வணிக பணக்காரர்கள் கொள்ளை தொடரும். மத்திய அரசாங்கத்திற்கு ஜி.எஸ்.டி வசூல் கூடுதலாக கிடைக்கலாம். ஆனால், தொடர்ந்து சரிந்துவரும் சாமானியரின் வாங்கும் சக்தி மென்மேலும் சிதைக்கப்படும். டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்வதாலும், மத்திய அரசின் விலையேற்ற வரிக் கொள்கைகளாலும் பெட்ரோல், டீசல் கேஸ் விலை ஏற்றம் மக்களை அழுத்தி நெருக்கடி தீவிரமாகும். பண வீக்கம் குறித்த விபரங்களை அலசிப் பார்த்தால் – அரிசி, கோதுமை போன்ற அடிப்படையான உணவு தானியங்களே கடுமையான விலையேற்றத்தை சந்தித்துள்ளன. இந்த நிலைமை வாராமல் தடுக்க, பொதுக் கொள்முதலை வலுப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், ஏற்றுமதிக்கு குறுகிய கால தடை என்ற கண் துடைப்பு நடவடிக்கையை மட்டுமே மோடி அரசாங்கம் முன்னெடுத்தது. பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்பது நிற்கவில்லை. இந்திய, அந்நிய பெரும் கம்பனிகளுக்கு வரிசலுகைகள், கடன் ரத்து என சலுகைகளுக்கு குறைவில்லை. கார்ப்பரேட் பெரு முதலாளி நண்பர்களுக்காக மட்டுமே செயல்படும் மோடி அரசின் கொள்கைகளும், அதன் சங்கிலித் தொடர் விளைவுகளும், பொருளாதார மந்த நிலையை தீவிரமடையச் செய்கின்றன. இப்படியே நிலைமை சென்றால், மீள முடியாத பெரும் குழியில் நாட்டு மக்களின் வாழ்வு சிக்கிவிடும் அபாயம் உருவாகியுள்ளது.
ஆனால் மோடி அரசாங்கத்திடமோ, நிதியமைச்சரிடமோ இந்த நிலைமை பற்றிய கவலையின் சுவடைக் கூட காண முடியவில்லை. சுயநல அரசியல் லாபத்தை நோக்கி மட்டுமே சிந்திக்கிறார்கள். இந்த நாசகர போக்கிற்கு எதிராக நாடெங்கும் அணிவகுக்க அழைக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.