உயர்ந்த பொறுப்புகளுக்கு சென்றாலும், உங்களில் ஒருவன்தான் நான் – முதல்வர் மு.க. ஸ்டாலின்
நான் அரசியல் பயிராகவே வளர்ந்தேன். உயர்ந்த பொறுப்புகளுக்கு சென்றாலும், உங்களில் ஒருவன்தான் நான் என உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய கூட்டரங்கில் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், முதல்வரின் ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். உங்களில் ஒருவன் புத்தகத்தின் முதல் பிரதியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட, அமைச்சர் துரை முருகன் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், என்னுடைய முதல் 23 ஆண்டுகால வாழ்க்கைதான் உங்களில் ஒருவன் புத்தகம்; விளையும் பயிர் முனையிலேயே தெரியும் என்பார்கள், நான் அரசியல் பயிராகவே வளர்ந்தேன். உயர்ந்த பொறுப்புகளுக்கு சென்றாலும், உங்களில் ஒருவன்தான் நான்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி போல் எனக்கு எழுதவும், பேசவும் தெரியாது, அவரை போல எழுதும் முயற்சியில் ஒன்றுதான் என் சுயசரிதை புத்தகம். அரசியல் என்பது என்னுடைய ரத்தத்தில் இருந்தது; எனது சிந்தனை, செயல் அனைத்துமே கழகம் தான் என்பது என் சுயசரிதையை வாசித்தால் தெரியும் – முதல்வர் மு.க. ஸ்டாலின் என்னை பண்படுத்திய கோபாலபுரம் இல்லம் குறித்தது தான் என் சுயசரிதை புத்தகம்.
திராவிட ஆட்சி முறைதான் எங்களது கோட்பாடு; திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும். நான் பிறந்த வருடம் குலக்கல்வியை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது; தற்போது நீட்-ஐ எதிர்த்து போராடி வருகிறோம்.
தமிழகம், கூட்டாட்சி தத்துவம் பற்றி அதிகம் பேசி வரும் ராகுல் காந்திக்கு நன்றி; மாநில உரிமைகளை மீட்க நாம் ஒன்றிணைய வேண்டும். மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.