“ரெட் அலர்ட் கொடுத்தும் ஒரு துளி மழை கூட பெய்யவில்லை”- அன்புமணி ராமதாஸ்!
வானிலை ஆய்வு மைய முன்னறிவிப்புகள் மேலும் துல்லியமாக இருக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ்வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள காரணத்தால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன மழை எச்சரிக்கை என்பது குறித்து வானிலை தொடர்பான தகவலைச் சென்னை வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகிறது .
குறிப்பாகச் சென்னையில் கனமழை பெய்து வந்த நிலையில், சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. ஆனால், இன்று மழைபெய்யவில்லை. இந்த சூழலில், வானிலை அறிவிப்புகள் மேலும் துல்லியமாக இருக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது “முன்னதாக வானிலை முன்னறிவிப்பு ரெட் அலர்ட் வழங்கியிருந்தது. ஆனால், இன்று மாலை வரை ஒரு சொட்டு மழை கூட இல்லை. அரசும், மக்களும் தயாராக இருக்க வானிலை அறிவிப்புகள் மேலும் துல்லியமாக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
ஆனால், இதற்கு முன்னதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் ரெட் அலர்ட் வழங்கப்படுவது குறித்து விளக்கம் அளித்திருந்தார். அதாவது ” ரெட் அலர்ட் என்றால் அனைத்து இடங்களிலும் 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் எனக் கருதக்கூடாது. மழைக்காக மட்டுமே ரெட் அலர்ட் கிடையாது, பாதிப்புகளையும் கருத்தில் கொண்டே எச்சரிக்கை” எனத் தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Weather predictions said “Red Alert” for rain today. Not one drop of rain till late evening. Weather predictions should be more precise and updated for the Public and Government to plan accordingly.#ChennaiRains #ChennaiFloods #RedAlertchennai
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) October 16, 2024