மு.க.ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்ட அதே இடம் உதயநிதிக்கு.! 2ஆம் இடம் யாருக்கு தெரியுமா.?
தமிழக அமைச்சரவை பட்டியலில் முதலிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2ஆம் இடத்தில் அமைச்சர் துரைமுருகன் 3வது இடத்தில் துணை முதல்வர் உதயநிதி பெயர் இடம்பெற்றுள்ளது.
சென்னை : தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் அண்மையில் நடைபெற்றது. இந்த மாற்றத்தோடு துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். துணை முதலமைச்சர் பொறுப்பு என்பது முதலமைச்சருக்கு அடுத்தபடியாக மூத்த அமைச்சர் என்ற அளவில் அதிகாரம் கொண்ட பதவியாகும்.
முதலமைச்சர் இல்லாத சமயங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பது, அமைச்சரவை கூட்டங்களை நடத்துவது, சில சமயங்களில் முதலமைச்சரின் அறிவுறுத்தல்களின் பெயரில் அமைச்சர்களுக்கு உத்தரவுகளை கூட துணை முதலமைச்சாரால் பிறப்பிக்க முடியும்.
இப்படி இருக்கும் சூழலில் அமைச்சரவை பட்டியலில் முதலிடத்தில் முதலமைச்சர் பெயருக்கும், அதற்கு அடுத்த இடத்தில் முதன்மை அமைச்சர் என்கிற முறையில் துணை முதலமைச்சர் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், உதயநிதிக்கு பட்டியலில் 3வது இடமே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அமைச்சரவை பட்டியலில் முதலிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெற்றுள்ளது. 2ஆம் இடத்தில் மூத்த அமைச்சர் துரைமுருகன் பெயர் இடம்பெற்றுள்ளது. அடுத்த இடத்தில் தான் துணை முதலமைச்சர் உதயநிதி பெயர் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்னர், கலைஞர் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 2009இல் அறிவிக்கப்பட்டார். அப்போது கூட மு.க.ஸ்டாலின் பெயர் அமைச்சரவை பட்டியலில் 3ஆம் இடத்தில் தான் இருந்தது. 2ஆம் இடத்தில் அப்போதைய மூத்த அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் பெயர் தான் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதும் அதே போல துணை முதலமைச்சர் உதயநிதிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.