“அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும்”..தமிழிசை சவுந்தரராஜனுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

udhayanidhi stalin tamilisai soundararajan

சென்னை : ஆளுநர் ரவி நேற்று கலந்து கொண்ட இந்தி மாதம் நிறைவுக் கொண்டாட்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகளை விட்டுவிட்டுப் பாடியது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட பலரும் ஆளுநர் பற்றி விமர்சித்து தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்தனர்.

அதன்பிறகு, ஆளுநர் மீது இந்த விவகாரத்தில் அதிகமான விமர்சனங்கள் எழுந்த காரணத்தால் ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து இதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டது. அதில் ” தமிழ் மற்றும் தமிழ் உணர்வு மீது ஆளுநருக்கு அதீத மரியாதை உண்டு.

இன்று அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திராவிட நல் திருநாடு என்ற வார்த்தை விடுபட்டது பற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அறிவுறுத்தினோம். அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பதைத் தவிர, ஆளுநருக்கோ அல்லது அவரது அலுவலகத்திற்கோ இதில் எந்த சம்பந்தமும் இல்லை” எனக் கூறப்பட்டு இருந்தது. இருப்பினும், இந்த விவகாரம் இன்னும் முடிந்த பாடு இல்லை.

தொடர்ச்சியாக இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு ஆதரவாகப் பலரும் குரல் கொடுத்து வருவதால் அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அரசியல் தலைவர்கள் பேசி வருகிறார்கள். அந்த வகையில், முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநருக்கு ஆதரவாகப் பேசிய நிலையில், அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ” இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது! அக்கா அவர்களே, திருவண்ணாமலையில் ‘கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ‘சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல – ‘சரி’ வலம்! ஓடாத தேரை ஓட வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்! ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணிச் செய்தவர் எங்கள் முதல்வர்!

‘எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே…! நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது. ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் – அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்” எனகூறியுள்ளார்.

முன்னதாக, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன் ” சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் படித்தவர்களின்  பாடிய முறையை நாம் பார்த்தாலே அவர்களுக்கு போதுமான பயிற்சி இல்லை. அதனால் அவர்கள் தவறாக பாடுகிறார்களே தவிர உள்நோக்கத்தோடு திராவிடத்தை தவற விட்டு பாடுவதாக தெரியவில்லை” என கூறியிருந்தார். எனவே, அதற்கு பதிலடி கொடுக்க தான் இப்படியான காட்டமான பதிவை உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டு இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்