“தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர்”….பெயர் பலகை முதல் ட்வீட்டர் வரை அப்டேட் செய்த உதயநிதி ஸ்டாலின்!
தலைமைச் செயலகத்தில் உதயநிதி ஸ்டாலின் அலுவலகம் வெளியில் "துணை முதலமைச்சர்" என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக அரசியலில், பெரிய கேள்வியாக இருந்தது என்னவென்றால், ‘துணை முதலமைச்சர்’ பதவி குறித்த கேள்வி தான். இந்த கேள்விக்கு நேற்று, முன்தினம் உதயநிதி ஸ்டாலின் தான் துணை முதல்வர் என பதில் கிடைத்தது.நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து, துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள, உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள். வாழ்த்து மழையில், சந்தோஷமாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கங்களிலும் துணை முதல்வர் என மாற்றி இருக்கிறார்.
முன்னதாக, அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் திமுக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ என வைத்து இருந்தார். அதனைத்தொடர்ந்து, “தமிழகத்தின் துணை முதலமைச்சர்” என்பதைச் சேர்த்துக்கொண்டார்.
அதைப்போல, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள உதயநிதி ஸ்டாலின் அலுவலகத்திற்கு வெளியில் “துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்” என எழுதப்பட்டுள்ள பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அமைச்சர் என எழுதப்பட்டிருந்த பலகை வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது நீக்கப்பட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என வைக்கப்பட்டுள்ளது.
முன்னரே, உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து திமுக தொண்டர்கள், கொண்டாட்டத்திலிருந்த நிலையில், தற்போது அரசியலில் துணை முதல்வராக அவர் எடுத்து வைக்கும் அடுத்தடுத்த அடிக்கு திமுக நிர்வாகிகள் உன்னிப்பாகக் கவனித்து வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.