கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை..! முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும் – ரஜினிக்கு துணை முதலமைச்சர் பதில்

- பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
- பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று ரஜினிக்கு பதில் தெரிவித்து துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த அண்மையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் பங்கேற்றார்.வழக்கமாக ரஜினிகாந்த் பேசும் ஒரு சில கருத்துக்கள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் அந்த வகையில் தான் இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்தும் பேசும்பொருளாக மாறியுள்ளது.இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், 1971-ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ஊரணியில் ராமர் மற்றும் சீதையின் சிலைகளை உடை இல்லாமல் எடுத்துச் சென்றனர்.ராமர் சிலைக்கு செருப்புக்கு மாலை அணிவிக்கப்பட்டது.இந்த செய்தியை துக்ளக் நாளிதழ் மட்டுமே வெளியிட்டது என்று ரஜினி பேசினார்.ரஜினிகாந்த் இவ்வாறு பேசியது முதல் அவருக்கு தமிழகத்தில் உள்ள அதிமுக,திமுக ,திராவிடர் கழகம் ,விசிக ,மதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது.ஆனால் பாஜக-வினர் மட்டும் ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் கருத்துக்களாக மட்டும் அல்லாமல் ரஜினிக்கு எதிராக ஒரு சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரது வீட்டை முற்றுகையிடுவதாக தெரிவித்தனர். ஆதித் தமிழர் பேரவையினர் ரஜினியின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகள் ரஜினிக்கு அதிகம் இருந்த நிலையிலும் தனது இல்லமான போயாஸ் கார்டனில் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கூறிய கருத்துக்கள் அனைத்தும் கற்பனையானவை அல்ல.நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். அதிலும் குறிப்பாக outlook india என்ற பத்திரிக்கையில் இருந்து இந்த செய்தியை அறிந்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
இந்நிலையில் மன்னிப்பு கேட்க முடியாதது என்று கூறிய ரஜினியின் கருத்து குறித்து துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறுகையில்,தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை .என்னைப் போன்ற எளியவர்கள் இந்த நிலைமைக்கு வர பெரியார் தான் காரணம்.பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.