‘3 மாதத்தில் மகளிர் உரிமைத்தொகை’ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு 3 மாதங்களுக்குள் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இந்த நிலையில், ரூ.1,000 கோரி புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய காந்திராஜன், திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூரில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயன்பெறும் மகளிர் எண்ணிக்கையை தெரிவிக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின் அறிவுரைப்படி புதிதாக விண்ணப்பித்தோருக்கு ரூ.1,000 கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஏற்கனவே, ஒரு கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்ட விதிக்கு உட்பட்டு கூடுதலாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை பயன்பெறாதவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுப்போம்” என துணை முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.