அரசு பேருந்துகள் இயக்கம்… மண்டல வாரியான விவரத்தை வெளியிட்டது போக்குவரத்துத்துறை!
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதிய பண பலன்களை வழங்குதல், அகவிலைப்படி உயர்வை வழங்குதல் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் பொதுமக்கள் அவதியில் உள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்து சேவை பெருமளவு பாதிக்கப்படும் என்ற அச்சமும் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி வழக்கம்போல் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார்.
போராட்டத்தை அறிவித்த தொழிற்சங்க கூட்டமைப்பின் தொழிலாளர்களே பணிக்கு வந்து பேருந்துகளை இயக்கி வருவதாகவும் கூறியிருந்தார். இதனிடையே, பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் விவரத்தை மண்டல வாரியாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.
தொடங்கியது போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்… அவதியில் பொதுமக்கள்!
தமிழ்நாடு முழுவதும் 92.96% பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாநிலம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்துகழக பேருந்துகள் 100% இயக்கப்படுகின்றன. சென்னையில் மாநகர பேருந்துகள் வழக்கத்தை விட கூடுதலாக 103% இயக்கப்படுகிறது.
நெல்லை மண்டல போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, தென்காசி, நாகர்கோவில், கன்னியாகுமரியில் 98.67% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை மண்டல போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் 97.41% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கும்பகோணம் மண்டல போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட இடங்களில் 82.98%, கோவை மண்டல போக்குவரத்து கழகத்திற்கு உட்பட் இடங்களில் 95.48%, சேலம் மண்டல போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட இடங்களில் 96.99%, விழுப்புரம் மண்டல போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட இடங்களில் 76.50% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என ஒவ்வொரு மாவட்டங்களின் பேருந்து இயக்கப்படும் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் விவரத்தை மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது போக்குவரத்துத்துறை..!#BusServices | #TamilNadu | #TNTransport pic.twitter.com/XcdxaKlIle
— Dinasuvadu (@Dinasuvadu) January 9, 2024