“துறையும் வளந்துருக்கு ..துறை அமைச்சரும் வளந்துருக்காரு”! – நிறைவு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதில் இந்தியாவிலே தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்கிறது என முதலைமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆண்டுதோறும் பிரமாண்ட விளையாட்டு போட்டியாக நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை போட்டியின், இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன. கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த இந்த போட்டிகளானது இன்று நிறைவு பெற்றுள்ளத்தைத் தொடர்ந்து, இதனது நிறைவு விழா நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார். அதன்பின், விழாவின் நிறைவில் இந்த முதலைமச்சர் கோப்பை குறித்தும் உரையாடினார்.
அவர் அதில் கூறியதாவது, “முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கியதற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் விளையாட்டு துறை அமைச்சர், துணை முதல்வராக ப்ரோமோஷன் அடைந்தது உங்களுக்கு மேலும் உற்சாகமாக இருந்திருக்கும். இந்தியாவே உற்று நோக்கும் துறையாக, விளையாட்டுத் துறையை மாற்றி அமைத்துள்ளார் துணை முதலைமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
விளையாட்டுத் துறையும் வளர்ந்திருக்கிறது, அந்தத் துறையின் அமைச்சரும் வளர்ந்திருக்கிறார். விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த உதயநிதி, துணை முதல்வரானதில் விளையாட்டு வீரர்களின் பங்கும் இருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டை உலகம் முழுவதும் எடுத்துக் காட்டும் நிகழ்வாக சென்னையில் நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட் எடுத்துக்காட்டாக அமைந்தது.
விளையாட்டு போட்டிகள் நடத்துவது மாணவ, மாணவிகளுக்கு உற்சாகத்தை தருகிறது. விளையாட்டு போட்டிகளை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்கிறது. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு உதவித் தொகைகளை வழங்கி வருகிறது.
மேலும், தமிழ்நாடு விளையாட்டுத் துறை பல்வேறு மகத்தான சாதனைகளை செய்து கொண்டே வருகிறது. விளையாட்டுத் துறையில் இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு புகழ்பெற்றுள்ளது. விளையாட்டுகளை மேம்படுத்த திறமையான வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டியது நம் அவசியம்.
கல்வி மற்றும் விளையாட்டுத் துறை ஆகியவற்றை நம் திராவிட மாடல் அரசு சரி சமமாக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும், ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு வெற்றி பெரும் விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கும் ஊக்கத்தொகை 2 லட்சம் முதல் 4 லட்சமாக உயரதியிருக்கிறது நம் திராவிட அரசு.
முன்னதாக நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் திராவிட அரசின் சாதனைகளை நடனங்களில் மூலம் வெளிப்படுத்தியதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”, என முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி இருந்தார்.