Dengue : அதிகாரிகள் வாரத்தில் 2 முறையாவது ஆய்வு செய்ய வேண்டும்.! டெங்கு ஒழிப்பு கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் வேண்டுகோள்.!
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று சற்று அதிகரித்து வருவது போல, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலும் ஆங்காங்கே பரவி வருகிறது. தீவிர காய்ச்சல் காரணமாக ஒரு சில மரணங்களும் தமிழகத்தில் நிகழ்ந்துவிட்டன. இதனால் காய்ச்சலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை செயல்படுத்தி வருகிறது .
டெங்கு பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று சென்னையில் அரசு மருத்துவர்கள், மருத்துவ உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட டெங்கு ஒழிப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்துகொண்டு பேசினார்.
அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், தமிழகத்தில் 11,333 மருத்துவமனைகள் உள்ளன. அது போக புதியதாக 500 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனை சேர்த்தால் தற்போது தமிழகத்தில் 11,833 மருத்துவமனைகள் உள்ளன. விரைவில் தமிழகத்தில் உள்ள மொத்த மருத்துவமனைகள் 12 ஆயிரமாக மாறும்.
மருத்துவத்துறை அதிகாரிகள் , அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு தினமும் அல்லது வாரத்திற்கு 2 முறை ஆய்வு செய்ய வேண்டும். அப்போது மருத்துவமனை சுற்றி நீர் எங்கும் தேங்கியுள்ளதா.? கொசு உற்பத்தி ஏதேனும் இருக்கிறதா என்பதை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் மழையானது மழைக்காலத்தில் மட்டும் தான் வரும் என்றில்லை. வெப்ப சலனம் காரணமாக எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யும் சூழல் இருக்கிறது. அதனால் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் மத்தியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் உரையாற்றினார்.