Dengue: டெங்கு பாதிப்பு குறித்து மருத்துவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.! பொது சுகாதாரத்துறை உத்தரவு.!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது பரவலாக பெய்து வரும் நிலையில் அங்காங்கே நீர் தேங்கி கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இத்தகைய கொசுக்கள் டெங்கு போன்ற நோய்களை பரப்பி பல உயிரிழப்பிற்கு காரணமாகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலும் ஆங்காங்கே பரவி வருகிறது.
இதனால் ஏற்படும் தீவிர காய்ச்சல் காரணமாக ஒரு சில மரணங்களும் தமிழகத்தில் நிகழ்ந்துவிட்டன. இதனால் காய்ச்சலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை செயல்படுத்தி வருகிறது. டெங்கு பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் தற்போது, தமிழ்நாட்டில் டெங்குகாய்ச்சல் கொசு உற்பத்திக்கு வழி வகுக்கும் பொது மக்கள், நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள் மீது அபராதம் விதிப்பதற்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, டெங்கு பாதிப்புகள் குறித்த தகவல்கள் தராமல் இருந்தால் ரூ.10 அபராதம் செலுத்த வேண்டும்.
கொசுக்கள் பெருகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு இணங்கத் தவறினால் 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். கொசுக்கள் பெருகுவதைத் தடுப்பது தொடர்பான பணிகளைச் சீர்குலைக்க முயற்சி செய்தால் ரூ.200 அபராதமாக செலுத்த வேண்டும். டெங்கு கொசு உற்பத்தி மற்றும் கொசு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் விவரங்களை பொது சுகாதாரத்துறைக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை தெரிவிக்காத மருத்துவர்களுக்கு சட்ட விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.