திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு -ஆர்ப்பாட்டம் தேவையா?- அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி
மின்கட்டண விவகாரத்தில், நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், ஆர்ப்பாட்டம் தேவையா என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்தது.இதையடுத்து, மின்சாரா வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் , ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என்றும் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் யூனிட் அடிப்படையில் கட்டணம் கணக்கிட முடியாது, பழைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என கொடுத்தது.
இதனிடையே மின்கட்டண உயர்வு உள்ளிட்ட விவகாரம் குறித்து காணொலியில் திமுக மாவட்ட செயலாளர், எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.பின்னர் மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.திமுகவினர் தங்கள் வீடுகள் முன் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இது குறித்து கூறுகையில், திமுக ஆர்ப்பாட்டம் நடத்துவது, நீதிமன்ற அவமதிப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது.மு.க.ஸ்டாலின் கவனமாக ஆர்ப்பாட்டம் செய்வது நல்லது.இந்த விவகாரத்தில், நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், ஆர்ப்பாட்டம் தேவையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.