ரஜினியின் முடிவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் – ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை
ரஜினியின் முடிவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள் என்று ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி அன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனவரியில் கட்சித் துவக்கம் என்றும் டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் பதிவிட்டார்.ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவித்தார் ரஜினி.பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட பின் ,டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.இறுதியாக கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். தேர்தல் அரசியலுக்கு வராமல் என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்வேன் என்று தெரிவித்தார்.ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ஒரு சில ஆதரவாளர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
இந்நிலையில் ரஜினியின் முடிவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள் என்று ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் வடசென்னை மாவட்ட செயலாளர் சந்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நம் மக்கள் தலைவரின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து சிலர் 10.01.2021 அன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் தெரியவருகிறது. அக்கூட்டத்தில் நம் மாவட்டத்தை சார்ந்த மாவட்ட, பகுதி, வட்ட பிற அணி மற்றும் நம் மக்கள் தலைவரின் உண்மையான காவலர்கள் யாரும் கலந்துகொள்ளக்கூடாது, மீறி கலந்துகொள்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.