தீபா, தீபக்கிற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை!
வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற தீபா, தீபக் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஜெயக்குமார் கோரிக்கை.
கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தீபக் மற்றும் தீபத்திற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டு, அன்றே வருவாய் வட்டாட்சியர் முன்னிலையில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் போயஸ் கார்டன் இல்லம் தீபா, தீபக்கால் திறக்கப்பட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்ததை தொடர்ந்து இதற்கான சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும், அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.
இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது என உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு பின்னர் வேதா நிலையம் இல்லம் தீபா, தீபக்கால் திறக்கப்பட்டது. இந்த நிலையில், ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். இதற்கு தீபா, தீபக் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலிலதா வாழ்ந்த இல்லம், நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்றும் எதிர்காலத்தில் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும் தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் வேண்டுகோளாக உள்ளது.
ஒரு சரித்திரம் சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் வகையில் தான் நினைவு இல்லமாக மாற்ற அப்போதைய எங்கள் அரசு சட்டம் கொண்டுவந்தது என்று தெரிவித்தார். எனவே, வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற தீபா, தீபக் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுவே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு செய்யும் சிறப்பான செயலாகும் என குறிப்பிட்டார்.