நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
சென்னையில் நந்தனம் தரமணி, அடையாறு, உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக – தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்து இருந்தார். அவர் கூறியதை போல சென்னையில் தற்போது மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வேளச்சேரி, பல்லாவரம், தாம்பரம், போரூர், ராயபுரம், திருவொற்றியூர், நந்தனம் தரமணி, அடையாறு, உள்பட பல இடங்களில் கனமழை பெய்கிறது.
மேலும், 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.