பத்திரப்பதிவு சட்டத்திருத்தம்! முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது – ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
பத்திரப்பதிவு சட்டத் திருத்தத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதாவது, மோசடியாக பதிவு செய்யப்பட்டது என கூறி பத்திரப்பதிவை ரத்து செய்ய மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கிய சட்டத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்ய மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்ட பிரிவின் அடிப்படையில் 2004ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று தென் சென்னை மாவட்ட பதிவாளர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உரிமையாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு விசாரணையில், முன் தேதியிட்டு அமல்படுத்த அனுமதித்தால் பல பத்திரப்பதிவுகள் பற்றி விசாரிக்க கோரிக்கை வரும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். முன் தேதியிட்டு அமல்படுத்துவது தொடர்பாக சட்டத்தில் எதுவும் குறிப்பிடாததால் அவ்வாறு அமல்படுத்த முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், 2004-ல் முறைகேடாக பதிவான பத்திரப்பதிவை ரத்து செய்ய தென் சென்னை மாவட்ட பதிவாளர் பிறப்பித்த நோட்டீஸ் ரத்து செய்து, உரிமையியல் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்று கொள்ளலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.