கண்தானம் செய்ய விரும்புவோர்களுக்கு உதவிடும் வகையில் பிரத்யேக இணையதள வசதி.! தொடங்கி வைத்த முதல்வர்.!
கண்தானம் செய்ய விரும்புவோர்களுக்கு உதவிடும் வகையில் பிரத்யேக இணையதள வசதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கடந்த 1985ஆம் ஆண்டு முதல் தேசிய கண்தான தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு வயது முதல் அனைத்து தரப்பு வயதினரும் கண்தானம் செய்யலாம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் பதினைந்து நாட்கள் தேசிய கண் தானம் குறித்த விழிப்புணர்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 2020ஆம் ஆண்டிற்கான தேசிய கண்தான துவக்க தினம் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. நாளை முடிவடையும் நிலையில் செப்டம்பர் 8ஆம் தேதி 35வது தேசிய கண்தான தினம் கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில் கண்தானம் செய்ய விரும்புவர்கள் எங்கு எவ்வாறு செய்வது என்ற விவரங்கள் தெரியாது. எனவே அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரத்யேக இணையதள வசதி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் நல்வாழ்வு குழுமத்தால் உருவாக்கப்பட்ட http://www.hmis.tn.gov.in/eye-donor என்ற இணையதளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் இருந்து துவக்கி வைத்தார். இந்த இணையதளம் மூலம் கண்தானம் செய்ய விரும்பும் நபர்கள் தங்களது பெயர், முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்த பின்னர், கண்தானம் செய்வதற்கான உறுதிமொழியை ஏற்று கொள்ள வேண்டும். அதனையடுத்து கண்தானம் செய்ததற்கான சான்றிதழை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. நாளை கண்தான தினத்தை முன்னிட்டு முதல்வர் பழனிசாமியும் கண்தானம் செய்வதற்கான ஒப்புதல் அளித்து சான்றிதழ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.