இலவச கட்டணம் என அறிவித்து விட்டு, பேருந்து சேவையை குறைப்பதா.? இபிஎஸ் கண்டனம்.!!

Edappadi K. Palaniswami

மகளிருக்கு நகர பேருந்துகளில் இலவசம் என அறிவித்துவிட்டு, பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்த நிலையில், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” அரசு போக்குவரத்துக் கழக நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் என்று அறிவிக்கப்பட்டது. அமைச்சர் பொன்முடி மகளிரை ஓசியில் பயணம் செய்பவர்கள் என்று பொருள்படும்படி கேலி பேசினார். தமிழக அரசுக்கு பல்வேறு துறைகளின் மூலம் வருமானம் வரும் நிலையில், அரசு பேருந்துத் துறை நஷ்டத்தில் நடப்பதாகக் காரணம் காட்டி, கிராமப்புற பேருந்துகளை நிறுத்தும் இந்த மக்கள் விரோத அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஆட்சிக்கு வந்து 24 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையிலும், இதுவரை ஒரு புதிய பேருந்தைக் கூட இந்த விடியா திமுக அரசு வாங்கவில்லை. இதுதான் இந்த நிர்வாகத் திறனற்ற விடியா அரசின் சாதனை. கடந்த 3ஆம் தேதி அன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளிப்படையாகவே, மகளிரின் இலவச பயணத்தால் பேருந்துகள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி, தமிழகத்தில் பொரும்பாலான கிராமப் புறங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன என்று தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் ஒரு புதிய பேருந்து கூட வாங்காமல், ஏற்கெனவே சென்னையில் தனியார் பேருந்துகள் ஒப்பந்த முறையில் இயக்கப்படும் என்று கூறிய இந்த விடியா அரசு, தற்போது ஒட்டுநர்கள் குறைவாக உள்ளனர். எனவே, நடத்துநர்களுக்கு வேலையில்லை என்று கடந்த சில நாட்களாக அரசு நடத்துநர்களுக்கு பணி வழங்காமல் இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

போக்குவரத்துத் துறை என்பது ஒரு சேவைத் துறை. இதில் தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு எதிராக, ஏதேனும் மறைமுகத் திட்டத்தோடு இந்த விடியா அரசு செயல்பட்டால், அதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. எனவே, உடனடியாக புதிய பேருந்துகளை வாங்கி, மகளிர் பயணம் செய்வதற்கு வசதியாக நகரப் பேருந்துகளின் செயல்பாட்டினை அதிகரிக்க வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்” என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்