நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனியாக களம் இறங்க முடிவு – மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை!
பாரதிய ஜனதா கட்சி, தனியாக களம் இறங்குவது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக – பாஜக இடையே இடப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில், அதிமுக கூட்டணி பாஜக இடம்பெறுமா அல்லது வெளியேறுமா என்று சந்தேகம் எழுந்தது. இந்த சமயத்தில் சென்னை கமலாயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் பாஜக தனித்து போட்டியிடும் என்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணி என்பது தொடர்ந்து நீடிக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி அவர்கள் தலைமையில், அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அங்கம் வகிக்கிறார்கள். பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவர்களும், அஇஅதிமுக மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறார்கள். இரண்டு கட்சிக்கும் இடையே உள்ளார்ந்த நட்புணர்வுடன் நல்லுறவுடன் இருக்கிறோம்.
இந்த நட்புறவும், நல்லுறவும் தேசிய ஜனநாயக் கூட்டணி தோழமையும் இப்போதும் தொடர்கிறது, இனியும் தொடரும். ஆகவே, இந்த நல்லுறவை தொடர்வோம் என்ற உறுதியினை, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடமும், இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடமும் தெரிவித்தோம். சமீபத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில், ஆளும் கட்சியாக திமுக இருந்த போதும் அதிமுக பாஜக கூட்டணி பல இடங்களில் ஆளும் திமுகவின் அத்துமீறல்களை எல்லாம் எதிர்த்து பெருவாரியாக வெற்றி பெற்றது.
அந்த வெற்றியும், பெற்ற வாக்குகளும் இரண்டு கட்சித் தொண்டர்களுக்கும் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கட்சியை வளர்த்தெடுக்கவும், தாமரை சின்னத்தை இல்லந்தோறும் கொண்டு சேர்க்கவும், உள்ளாட்சித் தேர்தல்களில் பரவலாக அதிக தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
எனவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்தாலும், இனிவரும் காலங்களில் நாங்கள் இணைந்து செயல்பட முடிவெடுத்து இருந்தாலும், கட்சியின் நலன் கருதி தொண்டர்களுக்கு நல்ல வாய்ப்பினை நல்கி உற்சாகப் படுத்துவதற்காக பாரதிய ஜனதா கட்சியின் நலன் கருதி, எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, தனியாக களம் இறங்குவது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.