தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற முடிவு..!
தூத்துக்குடி மாநகராட்சியில் இதுவரை அமைக்கப்படாத பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி கவுன்சில் கூட்டம் :
துறைமுக நகரமான தூத்துக்குடியில் பல பகுதிகளில் இதுவரை திறக்கப்படாத பாதாளச் சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற மாநகராட்சி கவுன்சில் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் உட்பட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
பாதாளச் சாக்கடை திட்டம் :
இந்த மாநகராட்சி கூட்டத்தில் தூத்துக்குடியில் இதுவரை பாதாள வடிகால் திறக்கப்படாத பகுதிகளில் ரூ.137.71 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,819 ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10 மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மரக்கன்றுகள் நடப்படும் :
இதனையடுத்து தமிழக முதல்வர் மு க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 70,000 மரக்கன்றுகள் நடப்படும் என்றும், இதன் முதற்கட்டமாக தருவைகுளம் பகுதியில் மாநகராட்சி குப்பை கொட்டும் இடத்தில் 1,000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும் கவுன்சில் கூட்டத்தில் மேயர் ஜெகன் கூறியுள்ளார்.