இ பாஸ் குறித்த முடிவு.. 29-ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை..!
தமிழகத்தில் இ பாஸ் குறித்து இறுதி முடிவு எடுக்க மாவட்ட ஆட்சியர்களுடன் 29-ம் தேதி ஆலோசனை.
கொரோனா பரவலை தடுக்க மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பயணம் செய்ய இ பாஸ் முறை அமலுக்கு வந்தது. சமீபத்தில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு கடிதம் ஒன்றை எழுதியது. அதில், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலும் பயணத்திற்கு தடை விதிக்கக் கூடாது என்று கூறியது.
இதனால், தமிழகத்தில் இ-பாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் இ பாஸ் குறித்து இறுதி முடிவு எடுக்க மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 29-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும், தமிழகத்தில் வருகின்ற 31-ம் தேதி உடன் ஊரடங்கு முடிவடைய உள்ளதால் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.