அதிமுகவிற்கு உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மரண அடி – மு.க.ஸ்டாலின்

Default Image
  • தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. 
  • எத்தனை கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தினாலும், அதிமுக தோல்வியடையும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.இந்த நிலையில் திமுக தொண்டர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், எப்படியாவது உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தப்பித்துவிடலாமா, அந்தப் பழியைத் தூக்கி எதிர்க்கட்சியான தி.மு.க. மீது போட்டுவிடலாமா என 2016-ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து விதிமீறல்களில் வெட்கமின்றி ஈடுபட்டு, முறையான இடஒதுக்கீட்டினையும் தொகுதி வரையறையையும் செய்யாமல் புறக்கணித்து, தில்லுமுல்லுகள் செய்து, தேர்தலை நடத்திடும் தெளிவோ துணிவோ இல்லாமல், உயர்நீதிமன்றத்திடமும் உச்சநீதிமன்றத்திடமும் வரிசையாகக் குட்டுப்பட்டுக் கொண்டே இருந்தது அ.தி.மு.க. அரசு.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும், குளறுபடிகளைச் சரிசெய்யாமல், அதே தேர்தல் தேதியை மீண்டும் அறிவித்த நிலையில்தான், தி.மு.கழகம் மீண்டும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. அந்த வழக்கில், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுக்கின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஏதோ தி.மு.க.,வுக்கு விழுந்த சம்மட்டி அடி என்பது போல நினைத்துக் கொண்டு ஓர் அமைச்சர் தள்ளாட்டத்தில் துள்ளாட்டம் போடுகிறார். கடந்த மூன்றாண்டுகாலமாக உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மரண அடி வாங்கி, மாநிலத்தின் மானத்தை வாங்கியிருப்பது அ.தி.மு.க ஆட்சிதானேதவிர, தி.மு.கழகத்தின் ஜனநாயகம் காக்கும் பணியை உச்சநீதிமன்றம் பாராட்டவே செய்திருக்கிறது.

சூதுமதியாளர்களாம் அதிகார அடிமைகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, உள்ளாட்சியில் நம் ஆட்சியை அமைத்திடும்போது, விரைவில் தமிழ்நாட்டில் அவர்களுக்கான நல்லாட்சி அமையப் போகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும். என்றும் நாம் மக்கள் பக்கம் நிற்போம்; எல்லா இடங்களிலும் வெற்றிக் களம் காண்போம்! வீணர்தம் கொட்டம் அடக்குவோம்; விவேகமும் வேகமும் நிறைந்த பணியை விரைந்தாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்