மாணவியை ரயிலில் தள்ளிவிட்டவருக்கு மரண தண்டனை! மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கின் குற்றவாளி சதீசுக்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை : கடந்த 2022-ஆம் ஆண்டு பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஷ் என்ற இளைஞர் சத்யபிரியா என்ற மனைவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக சதீஷை காவல்துறையினர் கைதும் செய்தனர்.
அதன்பின் அவரிடம் நடந்த விசாரணையில், தன்னுடன் பேசியதை நிறுத்தியதால் மாணவி சத்யபிரியாவை, தான் ரயில் முன்பு தள்ளி சதீஷ் கொலை செய்தார் என்கிற பரபரப்பான தகவலும் வெளியாகி இருந்தது. முதலில் இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், அடுத்ததாக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து, கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. அத்துடன், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சதீஷ்க்கான தண்டனை விவரம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வழங்கப்படும் எனவும் தள்ளி வைத்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது சதீஷிற்கு வழங்கப்படும் தண்டனை விவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியான சதீஷிற்கு மரண தண்டனை விதிக்கப்படும் என மகளிர் நீதி மன்றம் அறிவித்துள்ளது. பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, கொலை வழக்கின் கீழ் மரண தண்டனையை நிறைவேற்ற தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.