சென்னை : தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான டெல்லி கணேஷ் வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு காலமானார். அன்னாரது மறைவுக்கு சின்னத்திரைக் கலைஞர்கள், சினிமாத்துறையைச் சார்ந்தவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில், டெல்லி கணேஷ் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த இரங்கல் செய்தியில், “மூத்த திரைக்கலைஞர் ‘டெல்லி’ கணேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து, தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் டெல்லி கணேஷ்.
400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் மக்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் அளவுக்குச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக அவர் திகழ்ந்தார். வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் டெல்லி கணேஷ் பல தொடர்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். கருணாநிதியின் எழுத்தில் உருவான இளைஞன் திரைப்படத்திலும் டெல்லி கணேஷ் நடித்திருந்தார்.
தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை, குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”, என முதலைமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.