பங்காரு அடிகளார் மறைவு பக்தர்களுக்கு பேரிழப்பாகும்-எடப்பாடி பழனிசாமி..!

பங்காரு அடிகளார் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவருமான பங்காரு அடிகளார் அவர்கள், தனது 82-ஆவது வயதில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

ஆசிரியராக பணியைத் தொடங்கிய பங்காரு அடிகளார் அவர்கள், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி ஆன்மிக சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, கோயில் கருவறையில் பெண்களும் பூஜை செய்யலாம் என்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களை ஆன்மிகத்தில் செய்தவர். மேலும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என பல்வேறு கல்வி நிலையங்களை உருவாக்கி கல்வி சேவை ஆற்றியதோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் மூலம் மக்களுக்கு சேவை ஆற்றியவர். மனித குலத்திற்கு ஆற்றிய சேவைக்காக பத்ஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அன்னாரது இழப்பு ஆன்மிக பக்தர்களுக்கு பேரிழப்பாகும்.

பக்தர்களால் அம்மா என வணங்கப்பட்ட பங்காரு அடிகளார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், லட்சக்கணக்கான பக்தர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், பங்காரு அடிகளார் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்