ஒருவர் உயிரிழப்பு.., தரமில்லை என தெரியவந்தால் நடவடிக்கை – ஆட்சியர்
விபத்துக்குள்ளான மேம்பாலம் தரமில்லாமல் கட்டப்பட்டது என தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் விபத்துக்குள்ளான மேம்பாலம் விசாரணைக்கு பிறகு தரமில்லை என தெரியவந்தால் உரிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார். மேம்பாலம் விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த ஆட்சியர் இவ்வாறு கூறினார்.
மதுரை நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான ஆகாஷ் சிங் என்ற தொழிலாளி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேம்பாலம் இடிந்து விழுந்த இடத்தில் 40க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விபத்தில் சிக்கியவர்களை பொதுமக்கள், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் மீட்டு வருகின்றனர். பலத்தை இரு தூண்களில் இணைக்கும் போது ஹைட்ராலிக் எந்திரத்தில் ஏற்பட்ட பழுதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.