மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது -அமைச்சர் செந்தில் பாலாஜி..!
தமிழ்நாட்டில் மின் கட்டணம் செலுத்த இனி கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சிறு,குறு தொழிசாலைகள் மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின்சார கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் மே 31-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் அதனை ஜூன் 15-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக மின்சாரத்துறை உத்தரவிட்டது. நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு அவகாசம் மேலும் நீட்டிக்கப் பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாட்டில் மின் கட்டணம் செலுத்த இனி கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது. தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் இனி மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு கிடையாது. 50 சதவீத பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டதால் அவகாசம் தேவைப்படாது என தெரிவித்தார்.
மே 10 முதல் மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் அபராதமின்றி கட்டணத்தை கட்ட இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.