நீ வரி கட்டாதே.! நிர்மலா சீதாராமனுக்கு தயாநிதி மாறனின் வித்தியாசமான விளக்கம்.!
சென்னை: அண்மையில் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2024இல் தமிழகத்துக்கு என்று தனியாக சிறப்பு திட்டங்கள், நிதி ஒதுக்கீடு ஆகியவை இல்லை. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக எம்பி தயாநிதி மாறன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
அவர் கூறுகையில், ” கடந்தாண்டு தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அப்போது நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி வந்தார். அவங்க ஆட்கள் இருக்கும் கோயில் பகுதிக்கு மட்டும் சென்றிருந்த நிர்மலா சீதாராமனிடம் ஒருவர் கோயில் கட்டுமானம் பற்றி கூறினார். அந்த சமயம் ஒருவர் கோயில் உண்டியலில் பணம் போட வந்தார். அவரிடம், ‘ கோயில் உண்டியலில் காசு போடாதீங்க. அது மாநில அரசுக்கு சென்றுவிடும். அர்ச்சகர் தட்டில் தட்சணை போடுங்க.’ என கூறினார். ” அதனை,”வக்கிர புத்தி” என கடுமையாக விமர்சித்த தயாநிதி மாறன்,
அடுத்ததாக, ” அதே போல நாங்களும் தமிழக மக்களிடம் நீ வரி கட்டாதே, வரி கட்டினால் நம்ம பணம் டெல்லிக்கு சென்றுவிடும் என நாம் கூறலாமா.? அது எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கும் பார்த்தீர்களா.? அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதனால், மக்களின் வலி அவருக்கு தெரியாது ” எனவும் ஆர்ப்பாட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக எம்பி தயாநிதி மாறன் கூறினார்.