டாஸ்மாக் உயர் அதிகாரி கைது : லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

Default Image
சென்னை டாஸ்மாக் உயர் அதிகாரி கைது: லஞ்சம் வாங்கும் போது பொறிவைத்துப் பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீஸார்

 லஞ்சம் வாங்கிய சென்னை டாஸ்மாக் மூத்த அதிகாரி கையும் களவுமாக சிக்கினார். பணம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீஸார்  பிடித்தனர்.

சென்னை அண்ணாசாலையில் தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் சென்னை கோட்ட அலுவலகம் செயல்படுகிறது. இங்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் இந்த அலுவலக நிர்வாகத்தின் கீழ் வருகிறது.

குணசேகர் என்பவர் இந்த அலுவலகத்தின் மூத்த கோட்ட மேலாளராக டிஆர்ஓ அந்தஸ்தில்  பணியாற்றுகிறார்.

இவர் டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்களிடம் சாதாரண வேலைகளுக்கு கூட லஞ்சம் வாங்குவதாகவும், இவரைப் பார்க்க வேண்டுமானால்கூட லஞ்சம் கொடுத்தால் தான் முடியும் என்ற நிலை உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

தமிழக அரசு மதுவிலக்கு என்ற கொள்கையின் அடிப்படையில் 1000-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மூடியது. அதில் பணிபுரிந்த ஊழியர்களை வேறு பணிகளில் பணியமர்த்துவதற்கும் லட்சக் கணக்கில் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. ஊழியர்களை பணியமர்த்துவது, வேறு இடத்துக்கு மாற்றுவது என அனைத்திலும் லஞ்சம் கேட்பதாக புகார்கள் கடிதங்களாக வந்தன. லஞ்சம் பெற்ற பணம் மூலம் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளதாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் ஏற்கெனவே இருக்கும் ஊழியர்கள் தவிர புதிதாக ஒரு நபரை மண்டல மேலாளர் குணசேகர் நியமித்துள்ளார். இதற்கு சூப்பர் வைசர் ஜெயராம் இந்த டாஸ்மாக் கடையில் ஏற்கெனவே 6 ஊழியர்கள் இருக்கிறார்கள். மேலும் ஒருவர் தேவை இருக்காது என தெரிவித்துள்ளார்.

அப்படி ஒருவர் தேவை இல்லை என்றால் பணியமர்த்திய நபரை திரும்ப அழைத்துக்கொள்ள ரூ.50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கோட்ட மேலாளர் குணசேகர் கேட்டுள்ளார். இது குறித்து சூப்பர்வைசர் ஜெயராம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணத்தைக் கொடுக்க வசதி இல்லை. முதற்கட்டமாக ரூ.20 ஆயிரம் தருகிறேன் என்று கூறுங்கள் என்று ஆலோசனை கூறியுள்ளனர்.

அதே போல் சூப்பர்வைசர் ஜெயராம் கோட்ட மேலாளர் குணசேகரிடம் பேச சரி மீதிப் பணத்தையும் விரைவில் தந்துவிட வேண்டும் என்று கூறி ரூ.20 ஆயிரத்தை தனது அலுவலகத்தில் பணியாற்றும் சேல்ஸ்மேன் ரமேஷிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவப்பட்ட பணத்துடன் ஜெயராம் டாஸ்மாக் சென்னை மண்டல தலைமை அலுவலகத்துக்கு வந்துள்ளார்.

சொன்னபடி சேல்ஸ்மேன் ரமேஷிடம் ரூ.20 ஆயிரத்தை ஜெயராம் அளிக்க பணத்தை ரமேஷ் எடுத்துச்சென்று கோட்ட மேலாளர் குணசேகரனிடம் கொடுத்துள்ளார். அப்போது ஏற்கெனவே திட்டமிட்டபடி மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் பாய்ந்து சென்று குணசேகர், ரமேஷ் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்கள் கையிலிருந்த ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகள் சான்றுக்காக பறிமுதல் செய்யப்பட்டது.

உடனடியாக குணசேகர் அறையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் ஏராளமான பணம் கைபற்றப்பட்டதாக தெரிகிறது. லஞ்சம் வாங்கியதாக டாஸ்மாக் கோட்ட மேலாளர் குணசேகரையும், சேல்மேன் ரமேஷையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்