- பேரிடர் காலங்களில் பொது மக்கள் ஆபத்துகள் குறித்து தகவல் தெரிவிக்க தனியாக ஒரு வாட்ஸ்-அப் எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
பேரிடர் காலங்களில்,பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள் குறித்த தகவல்களை தெரிவிக்க,பேரிடர் முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென தனி வாட்ஸ்-அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே,இதைப் பயன்படுத்தி மக்கள்,பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்,இதுதொடர்பாக, அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:
- “பேரிடர்க் காலங்களில், பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்குப் பேரிடர் குறித்தான தகவல்களைக் குறித்த நேரத்தில் தெரியப்படுத்தும் ஒரு அமைப்பு முறையினை உருவாக்குவது மிக முக்கியமானதாகும்.
- இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய தேசிய கடல்சார் தகவல் மையம், மத்திய நீர்வள ஆணையம் போன்ற அமைப்புகளிடமிருந்து பெறப்படும் கனமழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்கள் குறித்தான எச்சரிக்கைத் தகவல்கள் TNSMART செயலி மூலமும், டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
- மேலும், பேரிடர்கள் மற்றும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஏதுவாக, பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவும், படம் எடுத்து அனுப்பும் வகையிலும் 24 மணி நேரமும் இயங்கும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் பேரிடர் முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென தனிப்பட்ட வாட்ஸ் அப் எண் 94458 69848 தொடங்கப்பட்டுள்ளது.
- இந்த எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் வரப்பெறும் பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் தொடர்புடைய அலுவலர்கள், துறைகளுக்கு அனுப்பப்பட்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- இது மட்டுமின்றி, பொதுமக்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள் குறித்து தகவல்கள் தெரிவிக்க ஏதுவாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணையதளத்தில் மக்கள் களம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை தகவல்களை மேற்படி வாட்ஸ் அப் எண் மூலமாகவும், இணையதளம் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.
- சென்னையில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம், தகவல் தொடர்பு மையமாக 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படுகின்றது.
- பேரிடர்க் காலங்களில், வருவாய் நிர்வாக ஆணையர் / மாநில நிவாரண ஆணையரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ், தேசிய பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட இதர முக்கியத் துறைகளின் மூத்த அதிகாரிகளின் துணையோடு 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்பட்டு, முன்னெச்சரிக்கைத் தகவல்களை மிகத் துரிதமாக அனுப்புகின்றது.
- பொதுமக்கள் 1070 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி மூலம் இம்மையத்தினைத் தொடர்பு கொண்டு பேரிடர் அபாயம் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க இயலும். இதுமட்டுமின்றி, பொதுமக்கள் பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கைத் தகவல்களை உடனுக்குடன் அனுப்ப TNSMART செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- மேலும், தாமினி செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்களுக்கு, தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 40 கிலோ மீட்டர் சுற்றளவில் இடி மற்றும் மின்னலின் தாக்கம் குறித்து 45 நிமிடங்களுக்கு முன்னர் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, இடி மற்றும் மின்னலின் தாக்கம் குறித்துப் பொதுமக்களுக்குத் தகவல் கிடைக்கப் பெறுவதால், இடி மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் குறைய வாய்ப்புள்ளது.
- எனவே,பேரிடர்க் காலங்களில், பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள் குறித்தான தகவல்களை பேரிடர் முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென தனி வாட்ஸ் அப் எண். 94458 69848 மூலமாகவும், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள மக்கள் களம் வாயிலாகவும் புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.