2025க்குள் 1,146 கோடி செலவில் சென்னை, தஞ்சை, திருச்சியில்… முதல்வர் அசத்தல் அறிவிப்பு.!
சென்னை: தமிழக சட்டப்பேரவை கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் துவங்கி துறை ரீதியிலான கோரிக்கைகள், அதன் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்போது இன்று நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் பற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் அவர் குறிப்பிடுகையில், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாழ்விட வாரியத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் 29,439 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 1,70,462 தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 172 திட்ட பணிகளின் கீழ் 79,094 அடுக்குமாடி குடியிருப்புகள், 89,429 தனி வீடுகள் கட்டுமான பணியில் உள்ளன. இதற்காக 6,685 கோடி ரூபாய் வரையில் இதுவரை செலவீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மட்டுமல்லாது, பழைய அடுக்குமாடி குடியிருப்புகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது. பயன்பாட்டில் பல ஆண்டுகளாக இருக்கும் சேதமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் மறுக்கட்டுமானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக, 1,93,891 அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் 23 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது. அவை அடுத்த 3 ஆண்டுக்குள் சீர்செய்ய்யப்படும். 2024 – 2025 ஆண்டிற்குள் சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கொடுங்கையூர், வஉசி நகர், தஞ்சை, திருச்சி பகுதியில் 6,746 அடுக்குமாடி குடியிருப்புகள் சீர் செய்ய 1,146 கோடி ரூபாய் செலவீட்டில் மறுகட்டுமானம் செய்யப்பட உள்ளது என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.