மதுரையில் 400 ஆண்டுகளுக்கு பின் கோவிலுக்குள் நுழைந்த தலித் மக்கள்…!
மதுரையில் 400 ஆண்டுகளுக்கு பின் கோவிலுக்குள் நுழைந்த தலித் மக்கள்.
மதுரை மாவட்டம் ஆனையூர் கொக்குளத்தில் உள்ள பேக்காமன் கருப்பசாமி கோயிலில் பட்டியலினத்தை சேர்ந்த ஒரு நபர் பூசாரியாக உள்ளார். ஆனால் அந்த கோவிலில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே அந்த கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதேசமயம் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் கோவிலுக்கு வெளியே நின்றுதான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற வழக்கம் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்புப்படி, பட்டியலினத்தை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி கேட்டு போராட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
இதனையடுத்து அரசியலமைப்பு சட்டத்தின் படியும், நீதிமன்ற உத்தரவின் படியும், நாட்டில் உள்ள எல்லா கோயில்களிலும் அனைவரும் நுழைய அனுமதி உண்டு என்பதை கிராம மக்களிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். அப்போது கோவில் பூசாரியான சின்னசாமிக்கு திடீரென்று அருள் வந்து அவர், ‘காலம் காலமாக இருக்கும் வழிமுறையை மீறி கோவிலுக்கு வருபவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து கோவிலுக்குள் செல்வர்களை தெய்வம் பார்த்துக் கொள்ளட்டும் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கான கிராம மக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் முதன் முறையாக நுழைந்தனர். இதன்மூலம் கோவில் போன்ற பொது இடங்களில் தலித் மக்கள் நுழையக்கூடாது என்ற எழுதப்படாத சட்டமும் தகர்தெறியப்பட்டது.