தேர்தலுக்காக சிலிண்டர் விலை குறைப்பு – காங்கிரஸ் விமர்சனம்!
உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்குவதற்கும், நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பதற்கும் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.
இந்த நிலையில், சிலிண்டர் விலை குறைப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் புகார் தெரிவித்து, விமர்சனம் செய்து வருகின்றனர். அதாவது, கடந்த 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது ரூ.417ஆக இருந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலை படிப்படியாக உயர்ந்து ரூ.1,118 ஆக உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் சிலிண்டர் விலையை கூடுதலாக ரூ.800 உயர்த்தியது பாஜக அரசு, தற்போது ரூ.200 குறைத்துள்ளது.
5 மாநில தேர்தல் நெருங்கும் நிலையில் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது வெறும் கண்துடைப்பு என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளின் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்தபோதும் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படாமல் இருந்தது வந்தது.
சமையல் சிலிண்டர் விலையை குறைத்து மக்களை ஏமாற்றிவிடலாம் என மோடி அரசு நினைக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி விமர்சித்துள்ளார். சிலிண்டர் விலையை திடீரென குறைத்துள்ளது வேடிக்கையாக உள்ளது. ரூ.200க்கு விற்க வேண்டிய சிலிண்டர் விலையை ரூ.1200 வரை உயர்த்திவிட்டு, தற்போது விலை குறைப்பதாக நாடகமாடுகிறது மத்திய பாஜக அரசு என்றுள்ளார்.