நிவார் புயல்: காரைக்கால், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு!
நிவார் புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில், காரைக்கால், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
புதுச்சேரியின் கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 550 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள நிவார் புயல், அதி தீவிர புயலாக மாறி நாளை மறுநாள் பிற்பகலில் நாகை – காரைக்கால் மாவட்டம் இடையில் கரையை கடக்கும். இந்த காற்றழுத்த தாழ்வு மையம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 100 – 120 கீ.மி. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் காவேரி, டெல்டா மாநிலங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் எனவும், 6 முதல் 10 சென்டிமீட்டர் வரை மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல், கடற்கரையில் கரையை கடக்கும்போது மீனவர்கள் தங்களின் படகுகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாரு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை, காவல்துறை, சுகாதார பணியாளர்கள் என அனைவரும் தயாராக உள்ளதாகவும், மீனவர்கள் அனைவரும் உடனடியாக கரைக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த நிபார் புயல், கஜா புயலுக்கு சமமாக இருப்பதாகவும், இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்த அதிகளவில் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.