மக்களே அலர்ட்: தீவிர புயலாக வலுப்பெற்றது மிக்ஜாம்.! சென்னையில் இருந்து 90 கிமீ..
தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களை புரட்டிப்போட்டு கொண்டு வருகிறது. புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அதி கனமழை பெய்து வருகிறது.
இதனால், அங்கு பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மிக்ஜாம் புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் நிலை கொண்டுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே நாளை முற்பகலில் தீவிர புயலாக கரையை கடக்கிறது.
இந்த சூழலில் மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், வங்ககடல் பகுதியில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் தீவிர புயலாக மாறியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் 47 ஆண்டுகளுக்கு பின் பெருமழை.. கடந்த 24 மணிநேரத்தில் 34 செ.மீ..
தீவிர புயலாக மாறிய மிக்ஜாம் புயல் சென்னைக்கு கிழக்கே 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. காலையில் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த மிக்ஜாம் புயல், தற்போது 8 கி.மீ வேகத்தில் குறைந்தது. 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல், மேலும் வலுப்பெற்று வடக்கு திசையில், தெற்கு ஆந்திரா பகுதிக்கு நகரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் 12 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதுவும், 47 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை பெருமழை பதிவாகியுள்ளது. மேற்கு நோக்கி நகரும் கருமேகங்கள் சென்னையில் மையம் கொண்டுள்ளதால் இன்று இரவு வரை கனமழை நீடிக்கும் என கூறியுள்ளனர்.